வெள்ளி, 10 ஜூலை, 2020

நிரப்பப்படாததா(ல்/ள்)

வெற்றுத்தாள்களாய் இருந்த நாங்களிருவரும்,
சரியான பதில்களாய் நினைத்துக்கொண்டு
கேள்விகளையே பாராமல்  எழுதமுயன்றோம்,
எனக்கான பதிலாய் நான் அவளையும் 
அவளுக்கான பதிலாய் நானுமென்று.

பின்னர்தான் தெளிவடைந்தோம் உணர்ந்து,
வேற்றுத்தாள்களாய் மாறிப்போனதையறிந்து
எழுத எத்தனிக்கும்போதே எதிர்ப்பைப்புரிந்து,
விடையெழுதாமலே விடைபெற்றுக்கொண்டு
அவரவர்தாள்களை திரும்பப்பெற்றுக்கொண்டு.

எங்களதுதாள்களில் கையெழுத்து இட்டுவிட்டு,
வெறுந்தாள்களாய் கர்த்தரிடம் சமர்ப்பித்துவிட்டு
கேள்விக்கேட்டதற்கு பதிலாக, காத்திருந்துப்பின்
கேள்விக்கேற்ற பதிலாக சரியான விடையைப்பெற
திருத்துபவரிடமே திருந்திப்போய் நிற்கின்றோம்.

திரும்பப்போய் அவரிடம் நாங்கள் நின்றாலும்,
கேள்விக்கு பதில்களாக இல்லை என்றாலும்,
எழுதியுள்ளதெல்லாம் எங்கு எப்படி சென்றாலும்,
கடைசி மூச்சுவரை எங்களை வென்றாளும்
கிறிஸ்துவிடமே ஒப்படைத்திருக்கிறோம் எங்களை.!


செவ்வாய், 16 ஜூன், 2020

மிஸ்டு கால்

கொடுத்த கடனை திரும்பக் கேட்கத்தான்
கால் பண்ணுவதாய் வாங்கியவன் தன்னை
தவறாக நினைத்துக்கொள்வானோ
என்று கொடுத்தவனும்,

திரும்பக் கடன் வேண்டுமென கேட்கத்தான்
கால் பண்ணுவதாய் கொடுத்தவன் தன்னை
தவறாக நினைத்துக்கொள்வானோ
என்று வாங்கியவனும்

நினைத்துக்கொள்வார்களோ என்னவோ
சகஜமாகக்கூட பேசிக்கொள்ளமுடியாதபடி
பலரது கால்கள் அழைக்கப்படாமலேயே
மிஸ்டு கால்களாகிக் கிடக்கின்றன.!


திங்கள், 8 ஜூன், 2020

COVIDடை மாற்ற DAVIDடாய் மாறு

கண்ணுக்குத் தெரியாத வைரஸைக்கொண்டு,
கண்ணோக்கியும்மைப் பார்க்கச் செய்தவரே;

எல்லாரையும் வீட்டிலேயே முடங்கச் செய்து,
முழங்காலில் எங்களை மடங்கச் செய்தவரே;

நீர் அனுமதித்துவந்த வாதையைக் கொண்டே,
எங்களது பொல்லாப் பாதையை மாற்றினீரே;


கொள்ளைநோயை எழுப்புதலின் ஆயுதமாக்கி,
உம் வருகைக்கு எங்களை ஆயத்தமாக்கினீரே;

பெயரளவில் கிறிஸ்தவராக வாழ்ந்தவரையும்கூட,
பேரழிவினின்று காத்து மனதையும் மாற்றினீரே;


இந்தியாவிலிருந்து எழுப்புதலை தொடங்குபவரே,
ஆச்சர்யப்படத்தக்கவிதமாயதனை முடிப்பவரே; 

வெகு சாதாரணமான எங்களைக்கொண்டும்,
மிகு அசாதாரணமான காரியங்கள் செய்வீரே;

மீண்டுமொருமுறை பூமிக்கு வரப்போகிறவரே,
மீண்டெழுந்து உம்மண்டை சேரப்பண்ணுவீரே.!