செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

எனது கவிதை

நான் தாடியுடன் இப்படியே திரிவதும்
ஷேவ் பண்ணி அழகாக தெரிவதும்,
உன்னுடைய முடிவில் தான் உள்ளது
என்று சொல்ல காதலி கிடையாது,
ஆயினும் சொல்கிறேன் சலூன் கடைக்காரரிடம்.!

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

எனது மொக்கைகள்

மொக்கை1: "பெயர்க்காரணம்"

       என் குழந்தை பருவத்தில், என் பெற்றோர் எனக்கு பெயர் வைக்கலாமா Say Yes (Or) No என்று என்னிடம் கேட்டனர், அதற்கு நான் No என்றேன். என்னது 'No'வா? என்றனர் உடனே என் தந்தை Nova (நோவா) இந்த பெயரே நன்றாக இருக்கிறதே என்று எனக்கு நோவா என்று பெயர் வைத்துவிட்டார்.
       நல்லவேளை நான் No என்றதால் நோவாவானேன், ஒருவேளை Yes என்று சொல்லியிருந்தால்  'Yes'ஆ 'எஸ்ஸா' என்று ஆகியிருப்பேன். நல்லவேளை அந்த பெயர் எனக்கு வைக்கப்படவில்லை. இதுதான் எனது பெயருக்கான பெயர்க்காரணம்.!


மொக்கை2:  "தூக்கமற்ற ஓர்  இரவு "

       ஒருநாள் எனக்கு இரவுமுழுதும் தூக்கம் வரவில்லையென்று என் தாயிடம் கூறினேன். இனி உரையாடலில்,
நான்: அம்மா எனக்கு நேத்து நைட் தூக்கமே வருல.
அம்மா: நைட் பூராவும் தூங்காம அப்படி எதைப்பத்தி யோசிச்சுகிட்டு இருந்த?
நான்: ஏன் எனக்கு தூக்கம் வருலனு யோசிச்சுகிட்டு இருந்தேன்.
அம்மா: (சற்று கடுப்புடன்) அப்போ எப்போதான் தூங்குன?
நான்: தூக்கம் வரப்போ தூங்குனேன்.
அம்மா: (சற்று அதிக கடுப்புடன்) அப்போ எப்பவரைக்கும் முழிச்சுகிட்டு இருந்த?
நான்: தூக்கம் வரவரைக்கும் முழிச்சுட்டு இருந்தேன்.
அம்மா: (கோபத்தின் உச்சியில்) இப்டியே பேசிட்டு இரு அப்புறம் என் கைதான் பேசும்.
நான்: ஓ, இதுதான் 'அம்மாவின் கைபேசி'யாமா ?
(இதற்கப்புறமும் நடந்ததைவேறு சொல்லவுவேணுமா?)


மொக்கை3:

       விடுமுறையில் என் அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தேன், ஒருநாள் என் தந்தையிடம் நான் போனில் பேசிக்கொண்டிருந்தபொழுது, உன்  அத்தை சமையல் எப்படி, நன்றாக சமைக்கிறார்களா? என்று கேட்டார். நான், என் அத்தை எனக்கு பின்னாடி இருப்பது தெரியாமல் 'எங்கத்த நல்லா சமைக்கிறாங்க?' என்று சலித்துக்கொண்டே உண்மையை உளறிவிட்டேன்.
       பிறகு திரும்பிப் பார்த்தேன் என்  அத்தை  என்னை முறைக்க தொடங்க, உடனே நான், 'எங்க அத்தை நல்லா சமைக்கிறாங்க' என்றுதான் சொன்னேன் என்றுகூறி அத்தையை நம்பவைத்துச் சமாளித்துவிட்டேன். இதில் தான் சொல்லமுடியாததை நான் சொன்னதால் மாமாவிற்கும் ஒரே சந்தோசம், இல்லையென்றால் பொண்ணு தரமாட்டாங்களே அதான்.!

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஒத்திகை

ஒத்திகை:

முன்பெல்லாம் உன்னிடம் தோற்கக்கூடாதென்று
பலமுறை எனக்குள் ஒத்திகை பார்த்திருந்தும்,
உன்னிடம் தோற்றுப்போனேன் நான்.!

இப்பொழுதெல்லாம் உன்னிடம் தோற்பதற்காகவே
எனக்குள் பலமுறை ஒத்திகை பார்த்துவந்து,
உன்னிடம் தோற்றுப்போகிறேன் நான்.!

சனி, 13 ஆகஸ்ட், 2016

எனது கவிதை அனுபவம்

இதெல்லாம் ஒரு கவிதையா?

நானெழுதியது கவிதையென நினைத்து
காட்டினேன் என் நண்பர்களிடம்; ஒருவன்,
'ஏதோ கவிதை எழுதியிருக்கிறாய் என்றாயே அதுயெங்கே?' என்றும்
மற்றொருவன், 'இதுதான் கவிதையா இதுவும் கவிதையா?' என்றும் கேட்டனர்.
ஆனால் அவர்கள் கூறியது எனக்கென்னவோ,
'இதெல்லாம் ஒரு கவிதையா?' என்றே கேட்டது.!

நீயேதான்

நீயேதான்:

எனக்குள்ளும் காதல் உள்ளதென்று
எனக்கே உணர்த்தியவளும் நீதான்,

எனக்குள் கொட்டிக்கிடக்கும் கவிதைகளை
வெளிக்கொணர்ந்தவளும் நீதான்,


இரவின் வெப்பத்தையும் பகலின் குளுமையையும்
ரசிக்கச்செய்தவளும் நீதான்,

இதுதான் காதலா அல்லது இதுவும் காதலா
என்று புலம்பச்செய்தவளும் நீதான்,

கடைசிவரை அந்த 'நீதான்' என்பது யாரென்று
என்னிடம் சொல்லாமல் சென்றவளும் நீயேதான்.!

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

எனது கதை

அறுவடையும் ஆறுவடையும்:

       ஒரு கிராமத்தில் ''விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம்'' நடந்தது. அங்கு வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்களது குறைகளை கொட்டி தீர்த்தனர். ஒருவர் அறுவடைக்கு முன்னமே போதிய மழையில்லாமல் பயிர் கருகி விட்டதென்றும், மற்றொருவர் வாங்கிய கடனை திருப்பி கட்ட வழியில்லையென்றும், இன்னுமொருவர் பருவநிலை மாற்றத்தால் விளைச்சலுக்கு சந்தையில் போதிய வருமானமில்லை நஷ்டமே மிஞ்சியதென்றும் ஒவ்வொருவராக குறைகளை கூறிக்கொண்டிருந்தனர். மேலும் மனுக்களையும் கொடுத்துவிட்டு தங்களது குறைகள் தீர்க்கப்பட்டு விடுமென நம்பிவந்துவிட்டனர்.

       அடுத்தநாள் காலை நாளிதழில், ''நேற்று நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமில் விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்பட்டது விவசாயிகள் மகிழ்ச்சி" என்று அச்சாகியிருந்தது. ஆனால் உண்மையில் நேற்று தீர்ந்தது விவசாயிகளின் குறைகளல்ல, அதிகாரிகளுக்காக பக்கத்து கடையில் வாங்கிவைத்திருந்த ஆறு வடைகள் மட்டுமே. மேலும் அவர்களது மனுக்கள்கூட வடையினது எண்ணெய்யை பிழிய உதவியதே தவிர வேறொன்றுக்கும் உதவவில்லை. அடுத்ததாக அந்த அதிகாரிகள் உங்கள் ஊருக்கு வந்தாலும் வரலாம், எதற்கும் ஒரு ஆறு வடைகள் வாங்கி வைத்து விடுங்கள் அவர்கள் பாவம்.!

கவிதை

செய்வினை - செயப்பாட்டுவினை

       விவசாயி நெல் சாகுபடி செய்தார்,
       நெல் விவசாயியை சாகும்படி செய்தது.!