சனி, 30 ஜூலை, 2016

நட்புறவு

நடைபயிலுமுதற்கொண்டு
நரைமுடிகொட்டும்வரை
நமக்காகத்தேர்ந்தெடுக்கும்
நல்லவுறவுகளே
நண்பர்கள்.!

இறை

அன்புள்ள எம் இறைவா,
உம் வார்த்தைகள் ஒருநாளும் இறவா.!

முதலும் முடிவும்

நித்தமும் பாடுவேன் நான் அந்தாதி,
ஆதியந்தமானவரின் சித்தமிருந்தால்.!

மற்றவரல்ல மாற்றுபவர்

சொற்பமாய் இருந்த என்னை,
சிற்பமாய் மாற்றியவர் நீரே கர்த்தாவே.!

அற்பமாய் எண்ணப்பட்ட என்னை,
அற்புதமாய் மாற்றியவர் நீரே கர்த்தாவே.!

எனக்கே உரித்தான கவிதை

எனக்கு இதய அறுவை சிகிச்சை ஏன் செய்தார்களென்று
எனக்கப்போது தெரியவில்லை, இப்போதுதான் புரிகிறது
இதற்கான காரணம், என்னுடைய இதயத்தை நீ
கொள்ளையடிப்பாயென தெரிந்ததால்தானோயென்னவோ
இப்படி சதி செய்திருக்கிறார்கள்
(ஐயையோ Sorry Sorry Spelling Mistake)
இப்படி சரி செய்திருக்கிறார்கள்.!


எனது கவிதை

சூரியனை நேருக்குநேராய் எதிர்கொள்வதாலேயே,
ஒளி கிடைக்கிறது சூரியனிலிருந்து நிலவுக்கு;
சுத்தியின் அடிகளை தாங்குவதாலேயே,
உளியிலிருந்து சிற்பமாகிறது கல்; அதுபோல
பிரச்சனைகளை தைரியமாக மேற்கொள்வதாலேயே,
வெற்றியானது வசப்படும்  நமக்கு.!


ஞாயிறு, 24 ஜூலை, 2016

எனது கவிதை

உனக்கு நான் அற்பமானவன்,
எனக்கு நீ அற்புதமானவள்.!

வரம்

தெய்வம்போல தாயும்
தாய்போல சகோதரியும்
சகோதரிபோல தோழியும்
தோழிபோல காதலியும்
காதலிபோல மனைவியும்
தேவதைபோல மகளும்
கிடைப்பது வரமாகும்.!

பெண்ணியம்

பெண்ணியம் பேசிய ஆண்களும்கூட,
பண்ணிய புண்ணியம் ஒன்றுமில்லை;
குலமகள் என்றால் கொண்டா பணம்,
விலைமகள் என்றால் இந்தா பணம்;
பணத்தால் பிணமாகும் பெண்கள் எத்தனையோபேருண்டு,
சமுதாயத்தில் அவர்களுக்கும்தான் எத்தனையோபேருமுண்டு;
மலடி, விதவை, ஓடுகாலி, வாழாவெட்டி, விபசாரி
இன்னுமின்னும் எத்தனையெத்தனையோபேர்.
ஒலிம்பிக்கில் இந்தியாவின் மானத்தைக் காப்பாற்ற பெண்கள் உண்டு,
இந்தியாவில் பெண்களின் மானத்தைக் காப்பாற்ற யார் உண்டு?

முடிவு உன் கையில்

ஆரம்பத்தில் எனக்குச் சாதகமாகத் தோன்றி 
நானெழுதும் ஒவ்வொரு கவிதையும்கூட, ஏனோ
முடிவில் உனக்குச் சாதகமாகவே அமைந்துவிடுகின்றன .!

கை வந்த கலை

கை வந்த கலை: 

முதலில் மறுப்பதும்
பின்னர் மறைப்பதும்
முடிவில் மறப்பதும்
பெண்களுக்கும்

முதலில் வேண்டாமென தவிர்ப்பதும்
முடிவில் வேண்டுமென கிடந்து தவிப்பதும்
ஆண்களுக்கும்

கை வந்த கலை.!

வெள்ளி, 22 ஜூலை, 2016

நினைப்பு

நினைப்பு:

உன்னை மறக்காமல் நினைத்துக்கொண்டிருக்கும்போதெல்லாம்
சமயங்களில் என்னை மறந்துவிடுகிறேன்.!

உன்னை மறக்க நினைக்கும்போதெல்லாம் மறந்துபோய்
உன்னையும் சேர்த்தே நினைத்துவிடுகிறேன்.!

உன்னுடைய ஒவ்வொரு நினைவுகளையும்,
உன்னுடைய வேறொரு நினைவு களையும்.!

உன்னை மறக்க நினைத்தேன்
பின்னர் படிப்படியாக மறந்தேன், உன்னையல்ல
உன்னை மறக்க நினைத்த நினைப்பை.!

வெள்ளி, 15 ஜூலை, 2016

விக்கல்

விக்கல்:

எனக்கு விக்கல் வரும்போதெல்லாம்
நீதான் என்னை நினைக்கிறாயென,
நான் உன்னை நினைத்துக்கொள்வேன்.!

ஞாயிறு, 10 ஜூலை, 2016

அன்பிற்கில்லை வறுமை

வறுமை:

என் நண்பன் என்னிடம் கூறினான், என் வீட்டில் நான் சாப்பிட்டால்தான் என் தாய் சாப்பிடுவாள் என்று.
நான் எவ்வாறு அவனிடம் கூறுவது, என் வீட்டில் நான் சாப்பிடவேண்டும் என்பதற்காய் என் தாய் சாப்பிடாமலிருப்பதை.!

கவிதை

ஒளி நேர்க்கோட்டில் செல்லுமென்று
எனக்கு உணர்த்திய ஆய்வுக்கூடம்,
எங்கள் ஓட்டை கூரை வீடுதான்.!

எனது கவிதை

கவிதை:

யாரோ யாருக்காகவோ எழுதவேண்டிய கவிதை ஒன்று,
இன்று என்னிடம் மாட்டிக்கொண்டு சித்திரவதை பட்டுக்கொண்டிருக்கிறது.!

எனது கவிதை

உருவத்தில்தான் நீ குள்ளம்,
அன்பில் பெருக்கெடுத்த வெள்ளம்,
உனக்கிருப்பதோ தூய்மையான உள்ளம்,
சிறிதும் அதிலில்லை கள்ளம்,
உன்னை தள்ளிவிட்டு கொன்ற இடம் ஒரு பள்ளம்.!

நீரே

நீரின்றி அமையாது உலகு
ஆம் கர்த்தாவே,
நீரின்றி அமையாது உலகு.!

வார்த்தை

தேவனே,
உம்மைப்பற்றி கவிதை எழுத
வார்த்தை பிடிபடவில்லை எனக்கு
பிறகுதான் புரிந்தது,
நீரே வார்த்தை என்று.!

விந்தை

நாம்  வென்று வந்தது கோடிகோடி விந்தை,
அதிலிருந்து மனிதனாக நாம் வந்ததும் விந்தையிலும் விந்தை.!

ஞாயிறு, 3 ஜூலை, 2016

தூக்கம்

முன் குறிப்பு:
             தூக்கம் 'தொலைத்த' ஒரு நள்ளிரவில்,
             'தேடாமல்' கிடைத்த கவிதை.!

தூக்கம் :
     "தூக்கத்தைப்பற்றிய கவிதையைக்கூட,
      தூக்கத்தைத்தொலைத்து எழுதவேண்டியிருக்கிறது."
      அடடே '!' குறி.

பின்குறிப்பு:
            இந்த கவிதை முதன்முதலில் தோன்றி எழுதப்பட்ட நேரம் நள்ளிரவு 2.30 மணி.!
           

அவசரம்


மிகவும் பொறுமையாக எழுதிக்கொண்டிருக்கிறேன்
ஒரு கவிதையை, 'அவசரம்' எனும் தலைப்பில்.
அடடே '!' குறி.