திங்கள், 13 ஜூலை, 2020

கூரில்லா மரணம்

முன்குறிப்பு:
இக்கவிதை என் நெருங்கிய கல்லூரிப்பருவ நண்பன் 'பாலமுரளி கிருஷ்ணா'வின் எதிர்பாராத மரணத்தின்(7-1-2014) விளைவாலும் அதனாலுண்டான வேதனையாலும் அவன்மீதிருந்த ஒரு பாசத்தாலும் அப்போதே கர்த்தர்மீதிருந்த அசைக்கமுடியாத விசுவாசத்தாலும் தோன்றியது.

"என்னுற்ற நண்பனை மீண்டும் உயிரோடு
காண்பதற்காகவே இப்பொழுதெல்லாம்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையானது
மிகச்சமீபமாய் இருக்கவேண்டுமென
வேண்டிக்கொள்வதே என் ஜெபமாயிற்று.!"

பின்குறிப்பு:
இக்கவிதையானது கண்டிப்பாக உண்மையாகத்தான் போகிறது, நானும் அவனை மீண்டும் காணத்தான் போகிறேன், என்னகொஞ்சம் அதற்கு சிறிது காலமாகும். "அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்"(மத்தேயு 24:36 & மாற்கு 13:32). இது எப்படிச் சாத்தியமாகும் என்பதையும் சொல்லுகிறேன்.

"கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் 'முதலாவது' எழுந்திருப்பார்கள். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்." - I தெசலோனிக்கேயர் 4: 16 & 18. இந்த வசனத்தில் சொல்லியுள்ளபடியே இது ஆகும் அப்போது அவனும் எழுப்பப்படுவான், நானும் அவனை முகமுகமாய் காண்பேன்.

நானும் இதனை வெறுமனே நம்பாமல், ஆணித்தரமாக உத்திரவாதமாக நம்பி விசுவாசிக்கிறேன், ஏனெனில் "வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" - மத்தேயு 5: 18 என்கிற வசனத்தின்படி இதெல்லாம் கட்டாயமாக நிறைவேறியேத் தீரும்.

ஆமென்.!

வெள்ளி, 10 ஜூலை, 2020

நிரப்பப்படாததா(ல்/ள்)

வெற்றுத்தாள்களாய் இருந்த நாங்களிருவரும்,
சரியான பதில்களாய் நினைத்துக்கொண்டு
கேள்விகளையே பாராமல்  எழுதமுயன்றோம்,
எனக்கான பதிலாய் நான் அவளையும் 
அவளுக்கான பதிலாய் நானுமென்று.

பின்னர்தான் தெளிவடைந்தோம் உணர்ந்து,
வேற்றுத்தாள்களாய் மாறிப்போனதையறிந்து
எழுத எத்தனிக்கும்போதே எதிர்ப்பைப்புரிந்து,
விடையெழுதாமலே விடைபெற்றுக்கொண்டு
அவரவர்தாள்களை திரும்பப்பெற்றுக்கொண்டு.

எங்களதுதாள்களில் கையெழுத்து இட்டுவிட்டு,
வெறுந்தாள்களாய் கர்த்தரிடம் சமர்ப்பித்துவிட்டு
கேள்விக்கேட்டதற்கு பதிலாக, காத்திருந்துப்பின்
கேள்விக்கேற்ற பதிலாக சரியான விடையைப்பெற
திருத்துபவரிடமே திருந்திப்போய் நிற்கின்றோம்.

திரும்பப்போய் அவரிடம் நாங்கள் நின்றாலும்,
கேள்விக்கு பதில்களாக இல்லை என்றாலும்,
எழுதியுள்ளதெல்லாம் எங்கு எப்படி சென்றாலும்,
கடைசி மூச்சுவரை எங்களை வென்றாளும்
கிறிஸ்துவிடமே ஒப்படைத்திருக்கிறோம் எங்களை.!