மொக்கை1: "பெயர்க்காரணம்"
என் குழந்தை பருவத்தில், என் பெற்றோர் எனக்கு பெயர் வைக்கலாமா Say Yes (Or) No என்று என்னிடம் கேட்டனர், அதற்கு நான் No என்றேன். என்னது 'No'வா? என்றனர் உடனே என் தந்தை Nova (நோவா) இந்த பெயரே நன்றாக இருக்கிறதே என்று எனக்கு நோவா என்று பெயர் வைத்துவிட்டார்.
நல்லவேளை நான் No என்றதால் நோவாவானேன், ஒருவேளை Yes என்று சொல்லியிருந்தால் 'Yes'ஆ 'எஸ்ஸா' என்று ஆகியிருப்பேன். நல்லவேளை அந்த பெயர் எனக்கு வைக்கப்படவில்லை. இதுதான் எனது பெயருக்கான பெயர்க்காரணம்.!
மொக்கை2: "தூக்கமற்ற ஓர் இரவு "
ஒருநாள் எனக்கு இரவுமுழுதும் தூக்கம் வரவில்லையென்று என் தாயிடம் கூறினேன். இனி உரையாடலில்,
நான்: அம்மா எனக்கு நேத்து நைட் தூக்கமே வருல.
அம்மா: நைட் பூராவும் தூங்காம அப்படி எதைப்பத்தி யோசிச்சுகிட்டு இருந்த?
நான்: ஏன் எனக்கு தூக்கம் வருலனு யோசிச்சுகிட்டு இருந்தேன்.
அம்மா: (சற்று கடுப்புடன்) அப்போ எப்போதான் தூங்குன?
நான்: தூக்கம் வரப்போ தூங்குனேன்.
அம்மா: (சற்று அதிக கடுப்புடன்) அப்போ எப்பவரைக்கும் முழிச்சுகிட்டு இருந்த?
நான்: தூக்கம் வரவரைக்கும் முழிச்சுட்டு இருந்தேன்.
அம்மா: (கோபத்தின் உச்சியில்) இப்டியே பேசிட்டு இரு அப்புறம் என் கைதான் பேசும்.
நான்: ஓ, இதுதான் 'அம்மாவின் கைபேசி'யாமா ?
(இதற்கப்புறமும் நடந்ததைவேறு சொல்லவுவேணுமா?)
மொக்கை3:
விடுமுறையில் என் அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தேன், ஒருநாள் என் தந்தையிடம் நான் போனில் பேசிக்கொண்டிருந்தபொழுது, உன் அத்தை சமையல் எப்படி, நன்றாக சமைக்கிறார்களா? என்று கேட்டார். நான், என் அத்தை எனக்கு பின்னாடி இருப்பது தெரியாமல் 'எங்கத்த நல்லா சமைக்கிறாங்க?' என்று சலித்துக்கொண்டே உண்மையை உளறிவிட்டேன்.
பிறகு திரும்பிப் பார்த்தேன் என் அத்தை என்னை முறைக்க தொடங்க, உடனே நான், 'எங்க அத்தை நல்லா சமைக்கிறாங்க' என்றுதான் சொன்னேன் என்றுகூறி அத்தையை நம்பவைத்துச் சமாளித்துவிட்டேன். இதில் தான் சொல்லமுடியாததை நான் சொன்னதால் மாமாவிற்கும் ஒரே சந்தோசம், இல்லையென்றால் பொண்ணு தரமாட்டாங்களே அதான்.!